Wednesday, April 15, 2009

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேசக் கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்துக் கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.

1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் பிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.

முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

- ஆதாரம்: (www.moulanaazad.blogspot.com)

ராஜகிரி கஸ்ஸாலி

திப்புவின் ஆட்சித்திறன்

திப்புவின் ஆட்சித்திறன்

திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.

“அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். “மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.”

காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.

சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர்.

திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.

தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

Monday, March 10, 2008

வரலாற்றில் சில உண்மைகள்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
February 2, 2008

1 பிப்ரவரி 08 ‘திண்ணை’ இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.

***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.

சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, ‘பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்’ என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி ‘ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது’ என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'’ என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.
சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற ‘அவசியம்’ ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

“திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!
திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் ‘சம்பவத்தை’ தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த ‘ஆதாரம்’ பற்றி விசாரித்தபோது, ‘கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை’ என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?

மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!
********************

வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம்.
அன்றைய பாரதியும் இன்றைய சுஜாதாவும் அச்சு ஊடகங்களில் செய்ததை, திரிபுவாதமே நோக்கமாக கொண்ட சிலர் இணையப் பக்கங்களில் செய்து வருகின்றனர். கூலிக்கு மாரடிப்பவர்களைப் போல அற்ப பிரதிபலன்களுக்காக எதை வேண்டுமானாலும் எழுத தயாராக உள்ள அனாமதேயங்களும் இவர்களுள் அடக்கம். எதையாவது எழுதி வைப்பதும் அவற்றிற்கான விளக்கம் கோரப்படும்போதும் ஆதாரங்கள் கேட்கப்படும்போதும் ஓடி ஒளிந்து கொள்வதும் இவர்களின் அடையாளம். விளக்கமளிக்கப்படாத இவர்களின் வார்த்தைகள், தொடர்பற்ற சங்கிலி வளையங்களைப் போல இணைய வெளியில் சுற்றி வருகின்றன. அச்சு ஊடகங்களைப் போலன்றி, இணையத்தில் இவர்கள் பொய்களை உலவ விடும்போதெல்லாம் அதற்கான எதிர்ப்புகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதில் விளக்கங்கள்தான் வந்தபாடில்லை!

குஜராத் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களின் ஆவிகள் நரேந்திர மோடியை இன்னும் விரட்டுவதாக கரண் தாப்பர் ‘Devil’s Advocate’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோடியை பேட்டி கண்டபோது குறிப்பிட்டார். ‘ஆவிகள்’ என அவர் குறிப்பிட்டது அந்தப் படுகொலைகள் தொடர்பாக மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையே! அந்த ‘ஆவி’களைப் போலவே இந்த இணைய திரிபுவாதிகளின் வார்த்தைகளும் இன்னும் இவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் வரை அவை விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி: திண்ணை

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்! - 2
February 15, 2008

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?
சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************

‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************

திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

நன்றி: திண்ணை
ஆதாரச் சுட்டிகள்:

யூசுப் கான் - கான் சாஹிப் - மருதநாயகம்
February 18, 2007

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது. சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றி வரலாற்று புத்தகங்களைவிட திரைப்படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். கான் சாஹிபிற்கு அந்தக் கொடுப்பினை(?) கூட (இதுவரை) இல்லை.

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:

இவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.

கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.

மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.

“விகடமிடுவோர்கள் குலகாலன் - வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் - நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”
இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.
தவிர-
கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:

“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”
இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).

இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.
அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!
=======
ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ - பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்

சிலஆதாரசுட்டிகள்:
-தி ஹிந்து- ஆன்சர்ஸ்.காம்


Monday, January 28, 2008

மரணத்தின் வாசல் படியில்

அன்பர்களே / நண்பர்களே,

வாழ்வில் எதை எதையோ பிடிக்க அல்லது சாதிக்க வேகம் வேகமாய் சென்று கொண்டிருக்கின்றோம்.இந்த பூமி வாழ்க்கை மிகவும் சிறியதான ஒன்று. பிறந்தவர்கள் எல்லோருமே மரணிக்க கூடியவர்களாகவேஇருக்கின்றோம். மரணம் என்பது இந்த உலகில் யாரையும் விட்டு வைக்க போவதில்லை.

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"

யாருக்கு எந்த வயதில் அல்லது எந்த பொழுதில், எந்த இடத்தில் அல்லது தருணத்தில்மரணம் வரும் என்றே சொல்ல முடியாது. அது எந்த சூழ்நிலையிலும் வரலாம். அப்படி ஒருவாழ்க்கைதான் இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லதுஇயங்கி கொண்டிருக்கின்றோம். இந்த பதிவில் நான் கடவுளை பற்றி சொல்ல வரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் மரணத்தை அதிகம் அதிகம் நினைத்தாலே போதும், தன்னோட மனசில் ஒரு இரக்கம் தானாய் வளரும். பிறரை அன்பாய் பார்க்க தோன்றும். போலி கெளரவங்கள் தன்னிடமிருந்துதானாய் மறையும்.

மரணம் வரும் வேலை : கருவில் கலைந்த குழந்தை, இறந்தே பிறக்கும் குழந்தை, பிறந்த உடன் இறக்கும் குழந்தை,ஓரிரு வயதில் அறியாமல் ஏதேனும் எடுத்து திண்று அல்லது விழுங்கி, இறக்கும் குழந்தை. விபத்தில்பலியாகும் மனிதர்கள். இயற்கை சீற்றத்தில் அழியும் மனிதர்கள். ஒரு காரியத்தை செய்ய துவங்கிஅது முடிவடைவதற்குள் உயிர் பிரியும் தருணங்கள் (உணவு உண்ணும்போதோ, கழிவறையில் இருக்கும்போதோ,பயண ஆரம்பத்திலோ, இடையில் அல்லது முடிவில் மற்றும் தற்கொலை சாவுகள், கொலைகள் என்றுநாம் பார்த்த மரணங்களை அதிகம் அதிகம் பட்டியல் இடலாம்.

எந்த நேரமும் தனது மனதை சாந்தமாக அல்லது திருப்தியாக மேலும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.அதாவது நமது இன்றைய வாழ்வுவரை நாம் இந்த உலகில் எல்லாவற்றையும் நிறைவேற்றியவர்களாக இருக்கிறோம்.நமக்கு இந்த உலகில் கிடைக்க வேண்டிய எல்லாமே கிடைத்துவிட்டது. எல்லாவற்றையும் அனுபவித்துமுடித்துவிட்டோம் என்ற மனநிலையை உருவாக்கி கொள்ளுங்கள். இது ஏனெனில் நமது ஆத்மா, நாம்உயிரோடு இருக்கும்போதே சாந்தி பெறும், அமைதி பெறும் என்பதனால் இதை சொல்கிறேன்.

முக்கியமாக நான் சொல்ல வந்த செய்தி என்னவெனில் (மார்க்கம் சம்பந்தபட்ட கேள்வி / பதில் நிகழ்ச்சி ஒன்றில்ஒருவர் தனது வீட்டு குளியல் அறையில் அல்லது ஏதோ ஒரு தனிமையான இடத்தில் ஒரு மனிதன் ஆடையிட்டு கொண்டுதான் குளிக்க வேண்டுமா? அல்லது ஆடை இல்லாமல் (நிர்வாணமாக) குளிக்கலாமா?என்ற கேள்விக்கு, அந்த அறிஞர் அதற்கு பதில் தருகிறார். தனிமையான ஒரு அறையில், மறைவான ஒரு இடத்தில் ஆடை இல்லாமலும் குளிக்கலாம், அது ஒரு குற்றம் இல்லை. ஆனால் அந்த சமயம் மரணம்வந்து உங்களை தழுவி விட்டால் அல்லது இறக்க நேரிட்டால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.நமது உடலை (மானத்தை) இந்த உயிர் இருக்கும்வரை நாம் பாதுகாக்கிறோம். அதுபோல மரணத்திற்கு பிறகு நாம் நமது உடலை மறைத்திருப்பதும் ஓர் நல்ல விசயம் இல்லையா? ஆகவே எந்நேரமும் தனதுஉடலில் உடையை பேணுவது நல்லது.

இன்னொரு முக்கிய செய்தி அன்பர்களே, நம்மிடம் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் நமது தொடர்புடையவீட்டு விலாசம், அலுவலக விலாசம், நமது தொடர்பில் (நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள்) தொலைபேசி எண்களை நம்முடன் எந்நேரமும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் எந்த இடத்தில்இருந்தாலும் சரியே, நமக்கு தெரிந்த அல்லது தெரியாத எந்த ஒரு இடத்தில் இருந்தாலும், அவசர உதவிக்குநம்மிடம் நம்மை அடையாளம் காட்ட கூடிய, அவசரத்திற்கு அழைக்க கூடிய விலாசம் மற்றும் எண்கள்இருப்பது மிக மிக அவசியமான ஒரு நிலை ஆகும்.

Thursday, January 24, 2008

இஸ்லாம் கூறும் சுவனம்

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் (இதுவரை) கண்டிராத, எந்தக்காதும் செவியுறாத எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை யெல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குரியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்து விட்டால் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் இனி நோயுற மாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜிவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி மரணிக்கவே மாட்டீர்கள், நீங்கள் இளமையாகவே இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆகமாட்டிர்கள் என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்தவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். என்று கூறியதும் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?’ என்று அபூபக்கர்(ரலி) கேட்டார்கள். ஆம், அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா: ஸஹ்லுப்னு ஸஅத் (ரலி))

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மோடு ஒப்பந்தம் செய்து வாழும் அந்நியன் ஒருவனை எவர் கொன்று விடுவாரோ அவர் சுவர்க்கவாடையை பெறமாட்டார். தங்கள் மேனிகளை மறைக்காமல் அறை குறை ஆடையில் நீர்வாணமாக உங்களை ஆட்டி அழைத்துச் செல்லும் பெண்கள் சுவர்க்க வாடையை பெறமாட்டார்கள்.
முதன் முதலாக சுவர்க்கத்தில் நுழைபவர்

நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன், சுவர்க்கவாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாயிலுக்கு வந்து அதை திறக்க தேடுவேன். அப்போது யார் என்று என்னிடம் கேட்கப்படும், ‘முஹம்மது’ என்று சொல்லுவேன். உமக்கு முன்னால் நான் திறக்கக் கூடாது என்று உம் விஷயத்தில் நான் ஏவப்பட்டு இருந்தேன். என்று (அதன் பாதுகாவலர்) கூறுவார்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; ”இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, ”பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள். (7:43)

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (15:47)

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அல்லாஹ் ஆதமை அவருடைய வடிவத்தில் படைத்தான். அறுபது முழம் நீளமாக அவருடைய உயரம் இருந்தது. அவரை படைத்த போது அமரர்களின் ஒரு கூட்டத்தினரிடம் போய் ஸலாம் சொல்வீராக! அவர்கள் உமக்கு எதனை பதிலாக சொல்கிறார்கள் என்று கேளும். அப்பதிலே உமக்கும் உம்முடைய சந்ததியினருக்கும் முகமன் வார்த்தையாகும் என்று அல்லாஹ் கூறினான். அவர்களிடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும வரஹமத்துல்லாஹி என்று ரஹ்மத்துல்லாஹி என்பதை அதிகமாக சொன்னார்கள். சுவர்க்கம் புகும் ஒவ்வொருவரும் ஆதமுடைய வடிவத்தில் அறுபது அடி உயரத்தில் இருப்பார்கள். குறைந்து. அறுபது முழம் உயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனித படைப்புகள் குறைந்து (ஆறு அடி உயரத்திற்கு ஆகிவிட்டார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள். (78:35)

அதில் அவர்கள்; ”(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். ”எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும. (10:10)

சுவர்க்கவாசிகளுடைய பதவிகளின் வித்தியாசங்கள்

சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உண்டு இரண்டு படித்தரங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் பூமிக்கும், வானத்திற்கும் இடையேயான வித்தியாசம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாத துப்னு ஸாமித் (ரலி))

சுவர்க்க வாசிகள் தங்களுக்கு மேலே உயர்பதவியிலுள்ள குரஃப் வாசிகள். அவர்களுக்கிடையே உள்ள பதவி வித்தியாசம் காரணமாக மிகமிக உயரத்தில் கீழ்திசையிலோ அல்லது மேல் திசையிலோ மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த மாதிரியான உயர் பதவியுடைய இடம் நபிமார்களுக்கு உள்ள இடங்களாக இருக்குமோ, அவர்களைத் தவிர வேறு எவரும் அடைய முடியாதவையாக இருக்குமே என்று வினவினார்கள். இல்லை! என் ஆத்மா எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வை விசுவாசித்து நபிமார்களை உண்மைப்படுத்தி வாழ்ந்தார்களோ அவர்களின் இடமாகும் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்;: அபூஸயீத் (ரலி))

சுவர்க்க வாசிகளுக்கிடையே, சந்திப்பு ஜியாரத் உண்டா? ஆம் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் கீழ்மட்டத்தில் இறங்கிவந்து முகமன் கூறி ஸலாம் கூறுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மேல் மட்டத்திற்கு செல்ல சக்தி பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் குறைவான அமல்கள் அவர்களை மேலே ஏற்றாது, தடுத்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கத்தில் கோட்டைகள்

சுவர்க்கத்தில் ஒரு கோட்டையைப் பார்த்தேன் இந்தக் கோட்டை யாருக்கென்று நான் கேட்டேன். குரைஷியரில் உள்ள ஒரு வாலிபருக்கு என்று கூறினார்கள். யார் அவர் என வினவியதும் உமர் என்றார்கள். நான் அதில் நுழைய நாடினேன். உமரே! உமது ரோஷத்தை நினைவு கூர்ந்து அதில் நான் நுழையவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், உமருடைய இரண்டு கண்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்கள் மீதா நான் ரோஷம் கொள்வேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். முஸ்லிம்)

சுவர்க்கத்தின் மாளிகைகள் தங்கம் வெள்ளி கற்களால் கட்டப்டிட்டிருக்கும் முத்துக்களும் மகரந்தங்களும் அதனுடைய சிறுகற்களாககும். அதன் மனம் குங்குமப் பூவாகும் அதில் நுழைந்தவர் சுபிட்சமாக இருப்பார். பீடைபிடித்தவராக மாட்டார். நிரந்தரமாக இருப்பார். மரணிக்கவேமாட்டார். அவரின் ஆடைகள் மக்கிப்போகாது, அவரின் இளமை அழியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா. (47:15)

மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசி

நபி மூஸா (அலை) அவர்கள் மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசியைப்
பற்றி எனக்கு அறிவிப்பாயாக! என அல்லாஹ்விடம் கேட்டார்கள். அல்லாஹ் கூறினான்: சுவர்க்கவாசிகள் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைந்து முடிந்ததும் கொண்டுவரப்படும் ஒரு ஆள் அவர் ‘சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என்று கூறப்படும் அவர் இரட்சகா! மனிதர்கள் தங்களுககு்காண இடங்களில் தங்கிவிட்டார்களே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியவைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்களே! எப்படி நான் நுழைவது என்று கேட்பார்.

‘உனக்கு உலகத்தில் வாழ்ந்த அரசர்களில் ஒருவர் இருந்த வாழ்கை வசதி போன்று ஆக்கிக் கொடுத்தால் திருப்திபட்டுக் கொள்வாயா? என்று அல்லாஹ் கேட்பான். திருப்தி பட்டேன் என்று அவர் சொல்லுவார். உனக்கு அதுவும் அது போன்றதும் உண்டு என்று அல்லாஹ் கூறியவுடன் இரட்சகா! நான் பூரண திருப்தியை அடைந்து விட்டேன் என்று கூறுவார் (முஸ்லிம், திர்மிதி: முகீரா இப்னு ஹீஃபா (ரலி)

கடைசியாக சுவர்க்கம் பிரவேசிக்கும் சுவர்க்கவாசி

கடைசியில் சுவனம் புகுவர் ஒரு மனிதர் அவர் ஒரு தடவை நடப்பார் மற்றொரு தடவை (நரகில்) முகம்குப்பிற கீழேவிழுவார் நரகம் அவரை கரிக்கும். கடைசியாக அதைத் தாண்டி வந்ததும் நரகத்தின் பால் திரும்பிப் பார்த்து, உன்னிடமிருந்து என்னை காத்துக் கொண்ட அல்லாஹ் மிக உயர்ந்தவன் என்று அல்லாஹ் எனக்கு முன்னோர்கள் பின்னவர்கள் எவருக்கும் கொடுக்காத ஒன்றைக் கொடுத்தான் என்றும் (நரகத்தின் வேதனையிலிருந்து வெளியானதைப் பற்றி நினைத்து மகிழ்ச்சியில் இவ்வாறு) கூறுவார். ஒரு மரம் அவருக்கு உயர்த்திக் காட்டப்படும்;. இரட்சகா! இந்த மரத்தின்பால் என்னை நெருக்கமாக ஆக்கிவை. நான் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டும் அதன் நீரை குடித்துக் கொள்வேன். என்றும் கூறுவார். ஆதமின் மகன் இதைக் கொடுத்தால் அதுவல்லாத மற்றவைகளையும் கேட்கலாம் அல்லவா? என்று இறைவன் சொல்வான் இல்லை இரட்சகா நான் வேறு எதையும் கேட்கப் போவது இல்லை. என்று கூறுவான். அல்லாஹ்வும் அவன் சொல்படி அம்மரத்தின் பக்கம் அவரை நெருக்கி வைப்பான். அவன் மேலும் கேட்பான் என்பதை அல்லாஹ் அறிந்தே இருக்கிறான். அதன் பின்னர் வேறு ஒரு மரம் முன்னதைவிட அழகானதாக காட்டப்படும். அப்போது இரட்சகா! இதன் பால் என்னை நெருங்கச் செய் அதன் நீரைக்குடித்தும். அதன் நிழலில் இளைப்பாறியும் கொள்வேன். அதுவல்லாத வேறு எதனையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன் பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான் ஆதமின் மகனே வேறு எதையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன்பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான். வேறு எதையும் கேட்பதில்லை என்று உடன்படிக்கை செய்வான். பின்னர். சுவர்க்க வாயிலில் முன்னவை இரண்டைவிட அழகான மரத்தைக் காட்டப்படும் இரட்சகா! இதன் பக்கம் என்னை நெருக்கிவை என்று கூறுவான். சுவர்க்கம வாயில் பக்கம் அவனை நெருக்கி வைத்ததும் சுவர்க்காவாசிகளின் சப்தங்களை கேட்பான். அங்குள்ள உபசரணைகள் வசதிகள் கண்டு இரட்சகா! என்னை அதனுள் பிரவேசிக்கச்செய் என்று கூறுவான் ஆதமுடைய மகனே! (எனது அருட்கொடைகளை என்னிடம் கேட்பதிலிருந்து) உனக்கும் எனக்குமிடையில் எது தடையாக இருக்க முடியும்? என்று சொல்லி துன்யாவும் இன்னும் அது போன்றதும் உனக்கு கொடுத்தால் திருப்தி படுவாயா? என்ற அல்லாஹ் கேட்பான் இரட்சகா நீயே அகிலத்தாரின் இரட்சகன்! என்னை பரிகசிக்கின்றாயா? என்று கேட்பான். அல்லாஹ் இவனின் இந்த சொல்லைக் கேட்டு சிரித்துவிட்டு நான் உன்னை பரிகசிக்கவில்லை என்றும், நான் நாடியதின் மீது சக்தி பெற்றவன் என்று கூறுவான். (முஸ்லிம்: இப்னு மஸ்வூத் (ரலி)

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவனவாழ்கையில் கிடைக்கும் எல்லாப் பாக்கியங்களை விட இறைவனைக் கானும் காட்சியே பெரிய பாக்கியம்.

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்து விடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்?) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் (அல்லாஹ்வை காண்பார்கள்) தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்படமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி: ஸுஹைப் (ரலி)
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்ற நீங்கள் உங்கள் இரட்சகனை பார்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

சுவர்க்கத்தில் 1000 படித்தரங்களுண்டு ஒவ்வொன்றுக்கும் இடைபட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரம் போல் இருக்கிறது. ஃபிர்தவ்ஸ் என்பதுதான் உயர்வான படித்தரமாகும். இதிலிருந்து தான் சுவர்க்கத்தில் 4 ஆறுகள் புறப்படுகின்றன. அதன் மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷு இருக்கிறது. நீங்கள் அல்லாஹ்விடம் துஆசெய்தால் ஃபிர்தவ்ஸையே கேளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாதத் இப்னு ஸாமித் (ரலி)

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்த கண்ணும் (இதுவரை) கண்டிராத எந்த காதும் செவியுற்றிராத எந்த உள்ளத்திலும் தோன்றிடாதவைகளால் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (32:17) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி)
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 32:17

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)

(அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (56:35 )

அப்பெண்களைக் கன்னிகளாகவும், (56:36)

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (56:37)

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:38)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: சுவனத்துப் பெண்களுடைய கால்களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கும் அப்பால் இருந்ததும் காணப்படக் கூடியதாக இருக்கும் (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் காணமுடியும். அவர்கள் பவளமும் முத்துமாக இருப்பார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்:இப்னு மஸ்வூத் (ரலி)

நபி(ஸல்) அவர்கள்: சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும் என்ற போது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதரே! இது இயலுமா? என்று கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னுஹிப்பான்: அனஸ் (ரலி)

சுவனத்துப் பெண்களில் ஒரு பெண் இப்பூமியில் உள்ளவர்களுக்குக் காட்சி அளித்தால், சுவனத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளைப் பிரகாசிக்கச் செய்வாள். அந்த இரண்டிற்கும் இடையே நறுமணம் வீசச் செய்வாள். அவள் தலையில் உள்ள முக்காடு இவ்வுலகையும், அதில் உள்ளவற்றையும் விடமேலானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அஹ்மத்: அனஸ் (ரலி)

மறுமை வாழ்க்கை (2)

மறுமை என்றால் என்ன?

இவ்வுலகவாழ்க்கை மிகக்குறுகிய காலத்திலேயே முடிவடைந்துவிடும். பிறப்பு, இளமை, வாலிபம், முதுமை மரணம் இவ்வளவுதான் வாழ்க்கை. இதில் பலர் இந்த பருவங்களை அனைத்தையும் கடந்துதான் மரணிப்பார்கள் என்று கூறமுடியாது. இப்படி நிலையற்ற வாழ்க்கைதான் இந்த உலக வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் மனிதன் எப்படி வாழ்கிறான், அவனைப்படைத்த இறைவன் அவனுக்கு கொடுத்தவாழ்க்கை முறையைப் பேணி கட்டுப்பட்டுள்ள குறுகிய வாழ்க்கைதான் இம்மை வாழ்க்கை (67:2, 11:7)

இந்த சோதனைக்கான முடிவுகள் உலகமக்கள் அனைவரையும் (முதல் மனிதர் முதல் உலகம் முடியும் வரை வரும் மக்கள் உலகம் முமுவதுமாக அழிந்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி அவர்களின் செயல்களுக்குத் தக்கவாறு (வெற்றித் தோல்வி) முடிவுகள் அமையும். அம்முடிவு நிரந்தரமானதொன்று, மரணமற்ற மறுமை வாழ்வு.

மறுபிறவி நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. தான் செய்த செயல்களுக்குத் தக்கவாறு மறு பிறவிகள் எடுப்பதாகவும் மற்ற மதங்கள் கூறுவது அறிவியல் ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் நிரூபிக்க, சரிகாண முடியாது. ஒரே வாழ்வு இம்மை மட்டும்தான் என்பதையும் ஏற்கமுடியாது.

மறுமை தேவை ஏன்

வாழ்நாள் முழுவதும் தவறான செயல்களைச் செய்பவன் தவறான வியாபாரம் செய்பவன் மக்களுக்கு தொல்லை தந்து விட்டு. சுகபோகமாக வாழ்ந்து மடிகிறான். அதற்குண்டான தண்டனை எப்படி? எப்போது? மறுமையில் தான்.
வாழ்க்கையை கட்டுப்பாடாகவும், முறையான வியாபாரம் மக்களுக்கு உதவி நேசத்தோடு வாழ்கிறான். அவன் இவ்வுலகவாழ்வில் கஷ்டமான வாழ்வு அவனுக்கு சுகபோகம் மறுமையில்தான்.

குற்றமற்றவன் தண்டனை அனுபவிக்கிறான். குற்றம் செய்தவன் தப்பித்துக் கொள்கிறான். சந்தர்ப்பம் சூழ்நிலை சாட்சியங்கள் அப்படி அமைந்து விடுகிறது. இதற்கு உண்மையான தீர்வு மறுமையில்தான்.

படுகொலைகள் பல செய்தவனுக்கும் ஒரே ஒரு கொலை செய்தவனுக்கும் மரணதண்டனை ஒருமுறை அதிக குற்றங்கள செய்தவன் அதற்குண்டான முழுமையான தண்டனையை அனுபவிக்க மறுமைதான். தனிமையில் பலகுற்றங்கள் செய்தவன் சாட்சியம் இல்லாதவன் தப்பித்துக் கொள்கிறான். தண்டனை மறுமையில்தான்.

பலசாலி ஒருவன் பலவீனனை தாக்கிவிட்டான் இவ்வுலகில் பழிதீர்க்க முடியவில்லை பழிதீர்ப்பது நீதி கிடைப்பது எப்போது மறுமையில்தான்.

இவ்வுலகில் குற்றங்கள் குறைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் ஒழுக்கங்களைப் பேண வேண்டும். நற்பண்புகளை கையாளவேண்டும். மனிதன் தான் பெற்றுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதனாக வாழவேண்டும் என்றால் மறுமை தேவை.

நாம் இவ்வுலகில் எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரம் வல்லமை தன் தவற்றை மறைக்கும் திறமைப் பெற்றிருப்பினும் அண்ட சராசரங்களை அடக்கியாளும் சக்தி ஒன்று உள்ளது. அந்த சக்திக்கு பதில் சொல்ல வேண்டும். இம்மையில் இல்லையென்றால் மறுமையில் பதில் சொல்ல வேண்டும். என்ற பயம் இருந்தால்தான் மனிதன் மனிதனாக வாழ்வான். மீறுபவன் படிப்பவன் தண்டனைப் பொறுவான். கட்டுப்பட்டவன் நல்ல நிலைகளை அடைவான். அதற்குதான் மறுமை (10:4, 45:21,22)

உலக அழிவு (மறுமை) எப்படி ஏற்படும் 1) சூரியன் வெடித்து நாலாப்பக்கமும் சிதறும். அதன் நெருப்பு ஜுவாலைகளால் கிரகங்கள் பற்றி எரிந்து பூமியே பஷ்பமாகிவிடும். 2) சூரியன் தன் ஒளியிழந்து குளிர்ந்து போகும் இதனால் பூமி இருளடைந்து குளிரால் உறைந்து உதவாத தரிசு நிலமாகிவிடும். 3) ஒரு விண்மீன் சூரியன் மீது மோதி சேதப்படுத்தும் சாலையோரம் நின்ற அப்பாவி ஒருவன் விபத்தில் பலியாவது போன்ற நிலைதான் பூமிக்கும். 4) ஒரு வால் நட்சத்திரம் படுவேகமாக வந்து பூமிமீது பயங்கரமாக மோதித்தாக்கும். 5) புவிஈர்ப்பு சக்தியினால் சந்திரன் பூமிக்குமிக அருகில் ஈர்க்கப்படும். அதனால் பெரும் கடல் கொந்தளிப்புகள் ஏற்படுவதுடன். எரிமலைகள் வெடித்து பூமி அழிந்துவிடும். விஞ்ஞானம் கூறும் ஆய்வுகள்.

குர்ஆன் கூறும் உண்மைகள்


மறுமைநாளின் அதிர்ச்சி மகத்தானதாகும். பாலூட்டும் தாய், குழந்தையை
மறப்பார், கர்ப்பமுடையவள் சுமையை (கர்ப்பத்தை) வைத்து (ஈன்று)விடுவாள். மனிதர்கள் மதி மயங்கி கிடப்பார்கள். (22:1,2)

அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்துவிடும் வானமும் பிளந்து அது பலமற்றதாக ஆகிவிடும். (69:15,16)

வானம் உருக்கப்பட்ட செம்பை போல ஆகிவிடும் இன்னும் மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும். (70:8,9)

பூமியும் மலைகளும் ஆட்டம் கண்டு மலைகள் சிதறி மண் குவியல்களாகிவிடும். (73:14)

நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும், வானம் பிளக்கப்படும், இன்னும் மலைகள் பறக்கடிக்கப்பட்டு விடும். (77:8,9,10)

சந்திரன் ஒளியிழந்துவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும். (75:8,9)

கடல்கள் தீ மூட்டப்படும்போது. (81:6)

நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது. (82:2)

மறுமை சாத்தியமில்லை என்று (காஃபிர்கள்) கூறுகிறார்கள்.

இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப் போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள். (17:49)

மேலும், அவர்கள்; ”நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். (56:47)

மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. (36:78)

உயிர்ப்பிக்க முடியுமா

”நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.) (37:53)

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (16:38)

உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) ”நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ”இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (11:7)

”மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?” (79:11)

(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ”அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (64:7)

ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்…. (64:9)

மறுமை சாத்தியம்

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; ”அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது… (7:187)
(நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். (17:50)

”அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). ”எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். ”உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். ”அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக! (17:51)

உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிந்ததாக நீங்கள் நினைப்பீர்கள். (15:52)

அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (75:4)

மறுமை நாளின் பெயர்கள்

யவ்முத்தீன் (1:4)
ஆஹிரா (2:85)
கியாமா (2:85)
தாருல் ஆஹிரா (2:94)
அஸ்ஸாசு (6:31)யவ்முல் ஹஸரத் (19:39)யவ்முல் பஅத் (39:56)
யவ்முல்ஃபஸ்ல் (37:21)
யவ்முத்தலாக் (40:15)
யவ்முல் ஹிஸாப் (40:27)
அல்வாகிஆ (56:1)
அல்ஹாக்கா (69:1-3)

கப்ர் அல்லது அடக்கஸ்தலத்தின் வாழ்க்கை

கப்ருடைய வாழ்கை

‘உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது ழுழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒலியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.

அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். நபித் தோழர்களில் நபியவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் ஸக்ராத்துடைய நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

ஸஃது (ரலி) அவர்கள் அகழ்யுத்தத்தின் போது கடுமையாகக் காயமுற்று நோயுற்றிருந்தார்கள். அவருடைய வீடு சற்று தூரத்திலிருந்ததால் அடிக்கடி அவரை நோய் விசாரிக்கச் செல்ல நபி அவர்களுக்கு சிரமமாயிருந்தது அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பதற்காக, அவருக்கென்று மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் வீடொன்று அமைத்துக் கொடுக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். அவ்விதம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னால் நபியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு நடு நிசியில் ஜிப்ராயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களைக் கவலையடையச் செய்யக் கூடியதாக ஒருவர் மரணித்து விட்டார். அதனையிட்டு அல்லாஹ்வுடைய அர்ஷ்க்கூட நடுங்குகிறது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஸஃது (ரலி) அவர்களிடம் சென்று பார்த்த போது அவர் இறந்திருக்கக் கண்டார்கள்.

மறுநாள் அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு, கப்ரினுள் வைக்கப்படுவதைப் பார்த்து கொண்டிருந்த நபியவர்கள் திடீரென ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றார்கள். நபித்தோழர்களும் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். சற்று நேத்தில் ‘அல்லாஹுஅக்பர்’ என்று நபியவர்கள் கூறினார்கள். நபித் தோழர்களும் அவ்விதமே கூறினார்கள். இவ்விருவார்தைகளாலும் ஆச்சிரியமடைந்த நபித் தோழர்கள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும் ‘யாரஸுலுல்லாஹ்’ வழக்கத்துக்கு மாறாக இன்று கவலையுடன் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும், மீண்டும் சந்தோஷத்துடன் ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறினீர்கள் இதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.

அப்பொழது நபிவர்கள் ‘ஸஃது (ரலி) கப்ரினுள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கப்ரு அவரை நெருக்குவதைக் கண்ணுற்றேன். அப்பொழுது கவலையுடன் ஸுப்ஹானல்லாஹ் என்றேன். அதனைத் தொடர்ந்து கப்ரு அவரை நெருங்குவதை விட்டு அவருக்க இடம் கொடுத்தது. அப்பொழுது அல்லாஹுஅக்பர்’ என்றேன் என்று கூறிவிட்டு ஒவ்வொரு கப்ரும் ஒவ்வொரு மனிதனையும் நெருக்காமல் விட்டு விடாது அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியுமென்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார் என்று கூறினார்கள். (அஹமது, நஸயீ: ஜாபிர் (ரலி)

‘நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்: ஆயிஷா (ரலி)

நபியவர்களுடைய கனவில் தோன்றிய கோரக் காட்சிகள்

‘கடந்த இரவு கனவில் என்னிடம் இருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நானும் நடந்தேன். அவ்வழியில் ஒருவன் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவன் பெரிய கல்லொன்றை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அவன் அதனைப் படுத்துக் கொண்டிருந்தவனின் தலையில் போட்டான். அதனால் அவனுடைய தலை தகர்ந்து தூள்தூளானது. அந்த கல் உருண்டு கொண்டு போகவே அதனைத் தொடர்ந்து அம்மனிதன் சென்று அதைத்தூக்கி கொண்டு, தான் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தான். அப்போது சிதைதிருந்த தலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவ்விதமே அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது’ இதனைக் கண்ணுற்ற நான் என்னச் அழைத்துச் சென்றவர்களிடம் ‘ஸுப்ஹானல்லாஹ்!’ இவர்கள் யார்? என்ற ஆச்சர்யத்துடன் கேட்டேன் அவர்கள் என்னை நோக்கி நடந்து வருமாறு கூறினார்கள்.

நான் அவர்களுடன் நடந்தேன். அப்பொழுது மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கருகில் சென்றோம். அவனுக்கருகில் முன் பக்கம் வளைந்த கம்பியைப் போட்டுப் பிடரி வரை கிழித்தார். பின்மூக்குத் துவாரத்தில் கம்பியைப் போட்டுப் பிடரிவரைகிழித்தார். பின்னர் ஒரு கண்ணில் அதனைப் போட்டுப் பிடரிவரை கிழித்தார். அதனைத் தொடர்ந்து அவனுடைய முகத்தின் மறுபக்கத்தையும் அவ்வாறே கிழித்தார். இப்பக்கத்தைக் கிழித்து முடிய அப்பக்கம் மீண்டும் பழையபடி நல்லநிலையை அடைந்திருந்தது இவ்விதமே தொடர்ந்து அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் ‘ஸுப்ஹானல்லாஹ்’ இவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து நடக்குமாறு எனக்குக் கூறினார். நாங்கள் நடந்தோம்.

அப்பொழுது அடுப்பு போன்ற ஓரிடத்துக்குச் சென்றோம். அதன் தோற்றம் (கிணறு போன்று) ஆழமான ஒரு பொந்தாக இருந்தது. அதன் மேற்பாகம் நெருக்கமானதாகவும் கீழ்பாகம் அகண்டதாகவும் இருந்தது. அதனுள்ளிருந்து பயங்கர சத்தம் வெளியாகிக் கொண்டிருந்துது. அதனுள்ளளே எட்டிப்பார்தோம். ஆடையெதுமின்றி ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அதனுள்ளிருந்து நெருப்பு சுவாலை விட்டு எரியும் போது, உள்ளிருப்பவர்கள் (நீரில் மிதப்பது போன்று) மிதந்து வருகின்றனர். அந்தப் பொந்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடியளவு மேல் மட்டத்துக்கு வருகின்ற போது நெருப்பு அணைந்து, மீண்டும் அடித்தளத்துக்கே சென்று விடுகின்றனர்.

இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது, அதனைக் கண்ணுற்றதும் அவர்கள் யார்? என்று கேட்டேன். அப்பொழுதும் அவர்கள் என்னை நடக்குமாறு கூறினார்கள்.

பின்னர் இரத்த நிறமான நதியொன்றுக்கருகில் சென்றோம். அந்த நதியில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். மற்றொருவர் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய காலுக்கருகில் கற்கள் நிறைந்திருந்தன. நீந்திக் கொண்டிருந்தவன் கரைவந்து சேருகின்ற போது நின்று கொண்டிருந்தவர். ஒரு கல்லை அவனுடைய வாயினுள் போட்டுவிடுகிறார். அவன் கல்லை விழுங்கிக்கொண்டு மீண்டும் நீந்திச் செல்கிறான். மீண்டும் கரைக்கு வருகிறான். இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது.

நான் கண்ட காட்சிகளுக்கு, என்னுடன் வந்த இருவரிடமும் இறுதியில் விளக்கம் கேட்டபோது ஒன்றின்பின் ஒன்றாக விளக்கமளித்தார்கள்.

கல்லினால் தலை தகர்க்கப்பட்டவன். அல்குர்ஆனைப் படித்தான். ஆனால் அதன்படி அவனது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. பர்ளான தொழுகையைத் தொழாமல் உறங்கிவிட்டான்.

வலமும் இடமுமாக முகம் கிழிக்கப்பட்டவன் காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் (தனது வயிற்றுப் பிழைப்புக்காக) பொய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

பொந்தினுள் கண்ட நிர்வாணிகளான ஆண்களும், பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இரத்த நிறமான நதியொன்றில் நீந்திக் கொண்டு கற்களை விழுங்கிக் கொண்டிருந்தவன் வட்டி உண்டவன்.

நபி (ஸல்) அவர்கள் தமது கனவை மேற்கண்டவாறு சொன்னார்கள். பர்ஸகுடைய உலகில் நடைபெறும் இவ்வாறான வேதனைகள் மறுமை நாள் வரை நடைபெறும் என்றும் கூறினார்கள். (புகாரி: ஸமுரா இப்னு ஜீன்துப் (ரலி))

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

கப்ருடைய வேதனையின் போது பாவிகளுக்குக் காலையும், மாலையும் நரகம் காட்டப்படும் என்பதை பிர்அவ்னுடைய கூட்டத்தை ஆதாரமாக் காட்டி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுவார்கள். மறுமை நாளிலோ ‘பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)’ (40: 45-46)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.

‘அதன் பின்னர் நபியவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமலிருக்க நான் கண்டதில்லை’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: ஆயிஷா (ரலி))

பாதுகாப்பு கப்ர் வேதனை

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

‘அல்லாஹ்வே! கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வருகையால் ஏற்படக்கூடிய சோதைனை ஆகியவற்றிலிருந்து’ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (புகாரி: அபூஹுரைரா (ரலி)

கப்ர்

கப்ரு என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சிபெறவில்லையென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் அவனுக்குக் கடினமாகி விடும். என்றும் கப்ருடைய காட்சிகளை விடமிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் என்றார்கள். (திர்மிதி, இப்னுமாஜா: உத்மான் (ரலி)

‘எவன் தன்னைத் தானே கேள்வி கேட்டு (விசாரனை செய்து) கொண்டு மரணத்துக்குப் பின்னாலுள்ள தனது வாழ்வுக்காக இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)

இந்த நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு உமர் (ரலி)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘நீங்கள் (கப்ரிலும் மறுமையிலும்) விசாரணை செய்பப்படுவதற்கு முன்னால் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். ஒரு பொழுது விசாரனைக்காக நீங்கள் நிறுத்தப் படுவதற்கு முன்னால் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அவன் இம்மையிலும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறானோ, அவனுக்கே மறுமை விசாரனை இலகுவாக அமையும்’ (திர்மிதி: உமர் (ரலி)