Monday, March 10, 2008

வரலாற்றில் சில உண்மைகள்

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
February 2, 2008

1 பிப்ரவரி 08 ‘திண்ணை’ இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.

***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.

சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.

சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, ‘பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்’ என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி ‘ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது’ என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். “ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'’ என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை ‘விலைக்கு வாங்கி’, அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.
சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற ‘அவசியம்’ ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

“திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்” என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை ‘துருக்கர்’ என்றும் ‘முகமதியர்’ என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!
திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் ‘சம்பவத்தை’ தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த ‘ஆதாரம்’ பற்றி விசாரித்தபோது, ‘கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை’ என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?

மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் ‘அன்பே சிவம்’ என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!
********************

வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம்.
அன்றைய பாரதியும் இன்றைய சுஜாதாவும் அச்சு ஊடகங்களில் செய்ததை, திரிபுவாதமே நோக்கமாக கொண்ட சிலர் இணையப் பக்கங்களில் செய்து வருகின்றனர். கூலிக்கு மாரடிப்பவர்களைப் போல அற்ப பிரதிபலன்களுக்காக எதை வேண்டுமானாலும் எழுத தயாராக உள்ள அனாமதேயங்களும் இவர்களுள் அடக்கம். எதையாவது எழுதி வைப்பதும் அவற்றிற்கான விளக்கம் கோரப்படும்போதும் ஆதாரங்கள் கேட்கப்படும்போதும் ஓடி ஒளிந்து கொள்வதும் இவர்களின் அடையாளம். விளக்கமளிக்கப்படாத இவர்களின் வார்த்தைகள், தொடர்பற்ற சங்கிலி வளையங்களைப் போல இணைய வெளியில் சுற்றி வருகின்றன. அச்சு ஊடகங்களைப் போலன்றி, இணையத்தில் இவர்கள் பொய்களை உலவ விடும்போதெல்லாம் அதற்கான எதிர்ப்புகளும் உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதில் விளக்கங்கள்தான் வந்தபாடில்லை!

குஜராத் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களின் ஆவிகள் நரேந்திர மோடியை இன்னும் விரட்டுவதாக கரண் தாப்பர் ‘Devil’s Advocate’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோடியை பேட்டி கண்டபோது குறிப்பிட்டார். ‘ஆவிகள்’ என அவர் குறிப்பிட்டது அந்தப் படுகொலைகள் தொடர்பாக மோடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையே! அந்த ‘ஆவி’களைப் போலவே இந்த இணைய திரிபுவாதிகளின் வார்த்தைகளும் இன்னும் இவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் வரை அவை விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி: திண்ணை

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்! - 2
February 15, 2008

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;

‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?
சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************

‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************

திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

நன்றி: திண்ணை
ஆதாரச் சுட்டிகள்:

யூசுப் கான் - கான் சாஹிப் - மருதநாயகம்
February 18, 2007

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது. சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றி வரலாற்று புத்தகங்களைவிட திரைப்படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். கான் சாஹிபிற்கு அந்தக் கொடுப்பினை(?) கூட (இதுவரை) இல்லை.

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:

இவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.

கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.

மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.

“விகடமிடுவோர்கள் குலகாலன் - வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் - நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”
இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.
தவிர-
கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:

“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”
இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).

இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.
அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!
=======
ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ - பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்

சிலஆதாரசுட்டிகள்:
-தி ஹிந்து- ஆன்சர்ஸ்.காம்