பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை
உம்மு ஷஹீரா W/o முஹம்மது ஷரஃபுதீன், Banawi Container Group, Jeddah
ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும்.1. முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது.2. உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது.3. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.4. ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது.5. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது.6.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது. (ஒரு பெண் மணம் பூசி அதன் வாசனையை நுகரும் வண்ணம் அவர்களைக் கடந்து போவாளாயின் அவள் ஒரு விபச்சாரியென நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - இந்த ஹதீஸை இமாம் அஹமத், அந்நிஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்).7. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது.
பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் தனது உடல் அழகை வெளிகாட்ட அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வெட்கக்கேடான செயலாகும்.
அல்குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம்:-
பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான். அல்லாஹுவின் திருத்தூதர் முஹம்மது(ஸல்) நவின்றுள்ளதாக பல ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
"நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்".(அல்குர்ஆன்-33:59)
இதன் மூலம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும், மஹரமற்ற ஆண்களுக்கு தன் அலங்காரங்களை காண்பிக்கக் கூடாது என்பது பற்றியும் கீழ்க் கண்ட வசனம் விளக்குகிறது.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ - 1167)
எனவே, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அல்லாஹுவின் கட்டளைக்கு கீழ்படியும் விதமாக பர்தா அணிய வேண்டும்.
பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:-
ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.
சில வருடங்களுக்கு முன்பு ஷரீகா ஷா என்கிற கல்லூரி மாணவியை ஆட்டோவில் சென்ற ரவுடிகள் அவளை பிடித்து இழுத்து ஆட்டோவின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்பெண் தெருவில் இழுபட்டு மரணித்ததை அவ்வளவு விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது. சரிவர உடலை மறைத்து உடை உடுத்தாததினால் தான் பெண்களுக்கு இப்படியான சம்பவங்கள் நேருகிறது என்று காவல் அதிகாரிகளால் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பர்தா அணிந்த ஒரு பெண்ணும் பர்தா அணியாத ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்லும் போது இவ்விருவரில் ஆண்கள் யாரை கிண்டல் கேலி செய்வார்கள் என்று ஜாகிர் நாயக் என்னும் அறிஞர் நிகழ்ச்சி ஒன்றின் போது மக்களைப் பார்த்துக் கேட்டார். பர்தா அணியாத பெண்ணைத் தான் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதில் சென்னார்கள்.
ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. (ஆதாரம் - தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு)
தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் ப.வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார்.(ஆதாரம் - தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு)
பர்தா இல்லாததினால் ஏற்பட்டுள்ள இத்தகைய விபரீதங்களை தடுக்கும் விதமாக இனிமேலாவது நம் சகோதரிகள் பர்தா உடுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டியவர்கள்:
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்போர் எண்ணற்ற பேர் உள்ளனர். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்கள், வேலைக்குச்செல்லும் என் சில தோழியர்கள் பர்தா அணிந்து தான் அவரவர் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.
பிரபலமானவர்களைப் பற்றி சொல்வதென்றால் கேரள நாட்டை சேர்ந்த கமலா சுரய்யாவை குறிப்பிடலாம். இவர் கேரளாவின் மிக புகழ் பெற்ற எழுத்தாளர். 1999-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தான் இஸ்லாத்தை தழுவியதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். ஒன்று பர்தா மற்றொன்று இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு.
உலகில் உள்ள ஆடைகளில் மிகவும் அழகானது பர்தா என்று குறிப்பிடுகிறார். நான் எப்பொழுதும் பர்தா உடுத்தியவளாகவே இருக்க விரும்புகிறேன். அது ஆத்மார்த்தமான பாதுகாப்பு அளிப்பதாக உணர்கிறேன். நிறைய முஸ்லிம் பெண்மணிகள் பர்தா அணிவது பற்றி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு பர்தாவின் அவசியத்தை எடுத்துரைத்து பர்தா அணியுமாறு ஊக்குவிப்பேன் என்கிறார்.
கேரள முஸ்லிம் மக்களிடையே பர்தா கலாச்சாரம் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. முன்பெல்லாம் மாதம் ஒன்றுக்கு 50 பர்தாக்கள் விற்ற கடைகளில் இப்பொழுது 200 பர்தாக்கள் வரை விற்பதாக ஒரு கடைக்காரர் கூறுகிறார்.(ஆதாரம்: http://us.rediff.com/news/2004/sep/15igi.htm)
மற்றும் ஒரு பிரபலமான பெண்மணி ஏஞ்சலா வில்லியம்ஸ் கதீஜத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர். சென்னை அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றுகிறார். அரபியிலும் சரளமாக பேசுகிறார். குர்ஆன், ஹதீஸிலும் ஆழமான அறிவு படைத்தவர். பர்தா நாகரிகத்திற்காகவோ அழகுக்காகவோ அணியப் படுவதில்லை. பெண்களின் அழகை அன்னியரின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் என்று இவர் கூறுகிறார். மேலும் பர்தா அணிவதால் புழுக்கமாக இருக்கும், பாரபட்சத்துற்காளாவோம் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை பர்தா அணிவதால் என் உடலில் துளிர்க்கும் ஒவ்வொரு வேர்வை துளிகளுக்கு பகரமாகவும் நான் சகித்துக் கொள்ளும் அசெளகரியங்களுக்கு பதிலாகவும் பர்தா அணியும் ஒரே காரணத்திற்காக நான் எதிர்க் கொள்ளும் பாரபட்சங்களுக்கு பதிலாகவும் இன்ஷா அல்லாஹ் எனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். பர்தா அணிவது கூட ஒரு வகை ஜிஹாத் என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கத் தூதரக அலுவலகத்திற்கு வந்தீர்களானால் என்னை பர்தா அணிந்த கோலத்தில் தான் பார்ப்பீர்கள் என்று கூறுகிறார்.(ஆதாரம்: சமரசம் 1-15 அக்டோபர் 2002)
லண்டனில் உள்ள நியூ ஸ்காட்லாண்ட் யார்டில் இஸ்லாமிய பெண் போலீசார் பர்தா அணிந்து பணிபுரிகிறார்கள். ஈரான், மற்றும் சூடான் நாடுகளிலும் பெண்கள் பர்தா அணிந்து காவல்துறையிலும், ராணுவத்திலும் கடமையாற்றுகிறார்கள்.
ஆதாரங்கள்:
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/965693.stm
http://www.islamfortoday.com/police.htm
http://www.islamfortoday.com/women.htm
பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:
மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே ஒன்றாக செயல் பட வேண்டிய பண்பாட்டு சூழலில் அம்மக்கள் வசிக்கிறார்கள். இதனால் இவர்கள் மிக எளிதாக இனக்கவர்ச்சியில் சிக்குண்டு சீரழிகிறார்கள். காரணம் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது தான்.
நொரீன் என்னும் அமெரிக்க பெண்மணி "சிகாகோ டிரிபியூன்" என்னும் பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்ப்பவர். தன் வேலை நிமித்தம் செய்திகள் சேகரிக்க வெளியே செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்கிறார். நவீன அமெரிக்க சூழலில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் கணவருடனும் மகளுடனும் வாழ்ந்து வருகிறார். அவர் நீச்சல் மற்றும் நடை பயிற்சியின் போதும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய உடை உடுத்தி தலையில் தொப்பி அணிகிறார். பர்தா அணிவது என்பது பெண்மையின் அனைத்து பண்புகளையும் பெண்களுக்கு அதிகப்படுத்துகின்றது, தவிர பெண்மையை ஒடுக்கும் விதமாக அது அமையவில்லை எனவும் கூறுகிறார். ஆதாரம்: (http://www.oprah.com/tows/pastshows/towns_past_20011005_g.jhtml)
ஹலீமா, நூர், ஸபியா, ஸாதியா இவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பர்தா அணிந்தபடி தான் வெளியே எங்கும் செல்வார்கள். கனடா நாட்டவர்கள் இவர்களிடமும், இவர்களைப் போன்று பர்தா அணியும் மற்ற சில பெண்களிடமும் இது கனடா நாடு, நீங்கள் இங்கே பர்தா அணியாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று கூறுவார்களாம். அதற்கு இந்த பெண்கள் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், அல்லாஹுவின் கட்டளைக்கு அடிபணிந்து நாங்கள் பர்தா அணிகிறோம், இது ஒரு சுதந்திர நாடு, நாங்கள் விரும்பியபடி ஆடை அணிய எங்களுக்கு உரிமையிருக்கிறது என கூறுகிறார்கள்.(ஆதாரம்: http://www.islamfortoday.com/hijabcanada.htm)
இந்த பெண்களின் மூலம் பர்தாவின் அவசியத்தை மேலைநாட்டவரும் உணர்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
பர்தாவை பிற்போக்குத்தனம் என கூறுபவர்களின் நோக்கம்:
மேற்கத்திய மக்கள் பெருவாரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாத்தின் இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காக யூதர்கள் பல வழிகளில் முயல்கின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களிடையே இஸ்லாத்தை பிற்போக்குவாத மதம் என்றும், தீவிரவாத மதம் என்றும், காட்டுமிராண்டிதனமான மதம் என்றும், பெண்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய மதம் என்றும் பலவாறாக சித்தரித்து மக்களை திசைதிருப்ப முயல்கின்றனர். இதில் ஒரு முக்கிய ஆயுதமாக பர்தாவையும் கையில் எடுத்துள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்கிற ரீதியில் பர்தா பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் பரவச் செய்கின்றனர்.
உதாரணமாக பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் பர்தா அணிவதை தடை செய்துள்ளார்கள். இதன் உள்நோக்கம் கிறிஸ்தவ பாரம்பரியத்தை காப்பாற்றுவது தான். மேலும், சமீபத்தில் நடந்த ஐக்கிய ஐரோப்பிய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் இஸ்லாம் தளைத்தோங்குவதை தடுக்கும் எண்ணத்துடன் பர்தா அணிவது பெண்களை பிற்போக்கு படுத்தி, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற சர்ச்சையை ஏற்படுத்தி பர்தாவை தடை செய்துள்ளனர். இதே தடையை ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாண்ட், ஆகிய நாடுகளிலும் அமல்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. (ஆதாரம்: http://www.freep.com/new/nw/islam/8_20040308.htm)
முஸ்லிம் நாடான துருக்கியை ஐக்கிய ஐரோப்பிய அமைப்பில் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ள இஸ்லாத்தின் கொள்கையை அடகு வைக்க கூறுகின்றனர். இதன் காரணமாக அங்கேயும் பர்தாவை தடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பிளிட்ஸ் பியாஸ் என்ற கல்லூரி மாணவி பர்தா அணிந்து பல்கலைகழகத்திற்குள் நுழையும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டாள்.(ஆதாரம்: http://www.inminds.co.uk/hijab-ban/personal.html)
நாகரீகம், படிப்பு, சுயகட்டுப்பாடு இவையே சிறந்த தற்காப்பு. இவையிருந்தாலே போதும்; பர்தாவின் அவசியம் தேவையில்லை என்று சொல்லக்கூடிய மேலைநாடுகளில் ஒன்றான கனடா நாட்டில், அந்நாட்டுப் பெண்கள் ஆறு நிமிடத்திற்கு ஒரு பெண் வீதம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.(ஆதாரம்: http://www.forumhub/expr/13422.20393.00.27.24.hg/)
இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவ மிஷனரியிலிருந்து பண உதவிகள் பெறுவதற்காக இலங்கையின் விடுதலைப்புலி அமைப்பினர் அங்குள்ள முஸ்லிம்களை ஒடுக்கும் விதமாக பர்தாவையும் ஒரு பகடைக் காயாக பயன்படுத்துகின்றனர்.(ஆதாரம்: http://www.Muslimedia.com/archives/world99/sri-hijab.htm)
அல்லாஹு எல்லா பெண்களையும் பேரழகுடன் படைத்திருக்கிறான். பர்தாவினுள் இருக்கும் அவ்வழகை ரசிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் காமவெறி பிடித்த கயவர்கள் பர்தாவை பிற்போக்குத் தனம் என கூறுகிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் தருகிறோம். மேலை நாடுகளைப் போல நம் நாட்டையும் நவீனமாக்குகிறோம் எனக் கூறி அழகிப் பேட்டி, மாடலிங், மற்றும் விளம்பரப் படங்கள் போன்ற கலாச்சார சீரழிவை விளம்பர முதலாளி வர்க்கத்தினர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்துகிறார்கள். கணவர் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை எல்லோரும் பார்க்க வரும்படி விளம்பரப்படுத்தி நுழைவுச் சீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பர்தாவை ஆதரித்தால் எங்கே இது மாதிரி அரைகுறை ஆடைகளுடன் பெண்களை நடக்கவிட்டு அவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்க இயலாமல் போய்விடுமோ என்கிற பயத்தினால் பர்தாவை பிற்போக்குத்தனம் என்றும் கூறுகிறார்கள்.
இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாமல் பர்தா அணிவதற்கு எதிரான வாதங்களை மாற்றுமதத்தினர் வாதிட்டாலும் அதே தரப்பினரில் இஸ்லாத்தின் மேன்மையையும் பர்தாவின் முக்கியத்தையும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவி கொண்டே தான் இருக்கிறார்கள்.
பெண்கள் பர்தா அணிவது எந்தவிதத்திலும் அவர்கள் சுதந்திரத்தை பாதிக்கவில்லை, அவர்கள் முன்னேற்றத்திகு எந்த தடையாகவும் இல்லை எனபதை மேலே தொகுத்தளித்திருக்கும் கருத்துக்கள் தெளிவாக விளக்குகின்றன.
எனவே எல்லா பெண்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவர்கள் மரணம் வரை பர்தாவைப் பேணி தன்னை அன்னிய ஆண்களின் பார்வையிலிருந்து காத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுவின் பொருத்தத்தை தேடி கொள்ள வேண்டும்.